
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அக்டோபர் மாத நிலவரப்படி 34 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், தட்டப்பாறை, சொக்கலிங்கபுரம், மாநகராட்சிக்கு உள்பட்ட முத்தம்மாள்காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைப் பணிகளை ஆட்சியர் என்.வெங்கடேஷ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். டெங்கு தடுப்பு நடவடிக்கைப் பணிகளில் ஈடுபடுவோருக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.
பின்னர், ஆட்சியர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய அக்டோபர் 27-ஆம் தேதி முதல் இதுவரை 72.89 மில்லி மீட்டர் சராசரியாக பதிவாகியுள்ளது.
அக்டோபர் மாதம் சராசரியாக 15 செ.மீ. பதிவாக வேண்டிய மழை தற்போது 3.6 சதவீதம் பதிவாகி உள்ளது.
நவம்பர் மாதத்தில் சராசரியாக 18 செ.மீ. மழை பதிவாக வேண்டும். கடந்த பத்து நாள்களில் கணக்குப்படி 66.38 சதவீத மழை மட்டுமே பதிவாகி உள்ளது.
அதன்படி பார்த்தால் 33.62 சதவீதம் மழை அளவு குறைந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.