திருவாரூரில் மழைநீரில் மூழ்கிய 40 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள்; பெரும் சோகத்தில் விவசாயிகள்…

First Published Nov 7, 2017, 9:03 AM IST
Highlights
40000 acres of Samba farmers drowned in rain water in Tiruvarur Farmers in great tragedy ...


திருவாரூர்

திருவாரூரில் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையினால் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கியதால் விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைத் தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 30-ஆம் தேதி முதல் தொடங்கிய மழை இடைவிடாது பெய்து வருகிறது. கன மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்து குளம்போல தேங்கி நிற்கின்றது.

போதிய வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் வடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து பெய்துவரும் பரவலான மழையால் அனைத்துச் சாலைகளும் பழுதடைந்து போக்குவரத்துக்கு பயனற்றதாகிவிட்டது.

கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்து தவிக்கின்றனர்.

சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழை நீர் சூழ்ந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் குடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி கோட்டூர், முத்துப்பேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது.

மழை தொடர்வதால் வயல்களில் தேங்கி உள்ள வெள்ளம் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

click me!