
அரியலூர்
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்று 32 கிராம விவசாயிகள் மற்றும் மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.
அப்போது, திருமானூர், திருமழபாடி, அரண்மனைகுறிச்சி, ஆண்டிமங்கலம், ஏலாக்குறிச்சி உள்பட 32 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மக்கள் திரண்டுவந்து ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், "திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட மணல் குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரினர்.
இவர்களுக்கு வழக்கறிஞர் முத்துக்குமார் தலைமைத் தாங்கினார். ஆட்சியர் விஜயலட்சுமி அந்த மனுவைப் பெற்றுக் கொண்டார்.
மேலும், இந்தக் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 201 மனுக்களை மக்களிடமிருந்து ஆட்சியர் பெற்றுக் கொண்டார். அந்த மனுக்கள் மீது துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளை காத்திருக்க வைக்காமல் அவர்களிடம் ஆட்சியரே சென்று கோரிக்கை மனுக்களை பெற்று அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டார்.