
திண்டுக்கல் அருகே பாதுகாப்பிற்கு சென்ற காவலர்கள் 3 பேரை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், காவேரியம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த சின்னகாளை, கிருஷ்ணன் மற்றும் வீராசாமி ஆகியோருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக இவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், அந்த இடத்தில் மின்கம்பம் நடுவதற்காக கிருஷ்ணன் அனுமதி பெற்று மின் இணைப்பு வழங்க மின்வாரிய ஊழியர்களுடன் சென்றுள்ளார்.
இது தொடர்பாக பிரச்சனை ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு பாதுகாப்பாக இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, கார்த்தி மற்றும் முத்துசாமி என்ற காவலர்கள் சென்றுள்ளனர்.
அப்போது, கிருஷ்ணன், வீராச்சாமி மற்றும் சின்னக்காளைக்கும் இடையே மின் கம்பம் நடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை போலீசார் தடுக்க முயன்றுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சின்னக்காளை இன்ஸ்பெக்டர் கோட்டைசாமியை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து தப்பிக்க நினைத்த கோட்டைசாமியை சின்னக்காளை விடாமல் தொடர்ந்து சென்று ஓட ஓட வெட்டியுள்ளார்.
இதனை தடுக்க சென்ற காவலர்கள் கார்த்திக் மற்றும் முத்துசாமிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இதனால் பலத்த காயாமடைந்த போலீசார் 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இதில் தொடர்புடைய சின்னக்காளையை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.