ஷாக் அடித்து சிறுமிகள் உயிரிழப்பு..! 3 மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட்..! அமைச்சர் தங்கமணி அதிரடி..!

First Published Nov 1, 2017, 5:30 PM IST
Highlights
3 eb officers suspend


சென்னை கொடுங்கையூரில் 2 சிறுமிகள் உயிரிழந்த நிகழ்வின் எதிரொலியாக  3 மின்வாரிய அதிகாரிகளும் 5 ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொடுங்கையூரில் மின்பெட்டியில் இருந்து வெளிவந்து அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து பாவனா, யுவஸ்ரீ என்ற 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மின்சாரத்துறையும் தீவிரமாக செயல்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் கனமழை காரணமாக மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. ஆனால் மின்வாரிய ஊழியர்கள் அதை அகற்றவில்லை. இதையடுத்து இன்று காலை வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள், அந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.

மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, மின்பெட்டிகளை முறையாக கண்காணிக்காமலும் மக்களின் புகாரை கருத்தில் கொள்ளாமலும் அலட்சியமாக நடந்துகொண்ட வியாசர்பாடி மின்வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட 3 அதிகாரிகளும் 5 மின்வாரிய ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மின்சாரப் பெட்டிகள், மின்கம்பிகள் ஆகியவற்றை முறையாக பார்வையிட்டு சரிசெய்ய இட்ட உத்தரவையும் மக்களின் புகார்களையும் அலட்சியப்படுத்தி முறையாக நடவடிக்கை எடுக்காததால் 3 அதிகாரிகளையும் 5 ஊழியர்களையும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பணியிடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

click me!