
கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மூன்று மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்துள்ளனர்.
வடகிழக்குப் பருவ மழை துவங்கி, கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஏற்கெனவே பெய்த மழையில் சென்னை நகரம் தத்தளித்து வருகிறது. பள்ளிகளும் இந்த மழை வெள்ளத்துக்கு தப்பவில்லை. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, பல்வேறு பகுதிகளில் இன்று தொடர் / கன மழை பெய்து வருவதாலும், மற்றும் பலத்த மழை நீடிக்க உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால், பள்ளி மாணவர்கள் நலன் கருதி நாளை (2.11.2017) சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப் படுகிறது என்று சென்னை ஆட்சித் தலைவர் அறிவித்தார்.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்யும் தொடர்மழையால் பள்ளிகளுக்கு நாளை மூன்றாவது நாளாக விடுமுறை விடப்படுவதாக, ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.