
புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில் இணையதளத்தில் சட்டத்திற்குப் புறம்பாகப் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தின் அட்மினைக் கண்டுபிடிக்க சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் இதுவரை 3 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் தற்போது கந்து வட்டி பிரச்சனை ஆட்டி படைத்து வருகிறது. கந்து வட்டியால் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதிய படங்கள் வெளியான அன்றே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தயாரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியாகவே உள்ளது.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில், திரைப்படங்கள் வெளியான அன்றே சட்டத்துக்கு புறம்பாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முடிவு கட்டும் விதமாக, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், ஞானவேல்ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் தகவல் தொழில் நுட்பக்குழுவை உருவாக்கி உள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மினைக் கண்டறிவதற்காகவே இவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த தொழில்நுட்பக் குழுவில் 42 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில மாதங்களாகவே, தமிழ் ராக்கர்ஸ் இணையதள அட்மினைக் கண்டறிவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
தொழில்நுட்பக் குழுவில் பணிபுரிபவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் 35 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவரை 3 கோடி ரூபாயை, செலவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
திருட்டு வீடியோ ஒழிப்புக்கு என்று ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அந்த படத் தயாரிப்பாளர், சங்கத்துக்கு 1 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கத்தின் வங்கி இருப்பு நிதி குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகி கூறும்போது, இந்த தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என்றும், தேவையில்லாமல் வதந்தியை கிளப்புகிறார்கள் என்றும் கூறினார்.