
கன்னியாகுமரியை மிரட்டிய ஓகி புயல், அங்கிருந்து விலகி திருவனந்தரபுரம் அருகே சென்றுவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஓகி புயலால், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று முடங்கியது. ஓகி புயலால், கனமழை பெய்ததோடு சூறைக்காற்று அடித்தது. இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் 500 மரங்கள் சாய்ந்தன. 4000க்கும் அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து முடங்கியுள்ளது. கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஓகி புயலால் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றுக்கு தமிழகத்தில் 4 பேரும் கேரளாவில் 4 பேரும் பலியாகியுள்ளனர்.
இவ்வாறு கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி எடுத்த ஓகி புயல் குமரிக்கடலை விட்டு விலகி திருவனந்தபுரம் அருகே சென்றுவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 230 கிமீ தொலைவில் தற்போது ஓகி புயல் மையம் கொண்டுள்ளது. குமரிக்கடலை விட்டு ஓகி புயல் விலகி சென்றதால், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இனி பாதிப்பு இல்லை. புயல் சின்னமானது லட்சத்தீவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
ஓகி புயல் தீவிரமடைந்து லட்சத்தீவை நோக்கி நகர்ந்துவருவதால், கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, தென் தமிழகம், தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் தெற்கு கேரளாவில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதன்பிறகு மழை அளவு படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.
புயல் சின்னமானது லட்சதீவு நோக்கி நகர்வதால் கடல் பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சமயங்களில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும். தெற்கு கேரளாவில் அடுத்த 48 மணிநேரத்திற்கும், தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.