
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மானாவாரி விவசாயிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 280 விவசாயிகளை காவலாளர்கள் கைது செய்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்
“மானாவாரி விவசாயிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.
அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
அனைத்து விவசாயிகளின் வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும்.
60 வயதான அனைத்து விவசாயிகளுக்கும் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைப்பெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஐயலுசாமி, ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் நல்லையா, தாலுகாச் செயலாளர்கள் லெனின்குமார், கிருஷ்ணமூர்த்தி, மாரிச்சாமி, கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலாளர் பாலமுருகன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலாளர் தமிழரசன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த நிகழ்விடத்திற்கு வந்த கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேல், காவல் ஆய்வாளர்கள் பௌல்ராஜ் (கிழக்கு), ராஜேஷ் (மேற்கு) தலைமையிலான காவலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட 123 பெண்கள் உள்பட 280 விவசாயிகளை கைது செய்தனர்.