கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் இன்று காலை 2 ஆயிரத்து 787 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்தது
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் பருவ மழை சரியாக பெய்யாத காரணத்தால் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுத்தது.
இதனையடுத்து காவிரி ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டதையடுத்து முதல் முறை 10ஆயிரம் கன அடி நீரும், அடுத்ததாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இருந்த போதும் இந்த தண்ணீர் குறுவை சாகுபடிக்கு பற்றாத நிலை இருப்பதாக கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம்
இந்தநிலையில் கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 4726 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் முழு கொள்ளளவு 84 அடியில் தற்போதைய நீர்மட்டம் 75.82 அடியாக உள்ளது. மற்றொரு அணையான கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு இன்று காலை, நீர்வரத்து 3686 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 1687 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் முழு கொள்ளளவான 124.80 அடியில் தற்போது நீர்மட்டம் 98.06 அடியாக உள்ளது. இந்தநிலையில் காவிரி ஆற்றில் இன்று காலை 2 ஆயிரத்து 787 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
குறைந்த அளவு தண்ணீர் திறப்பு
ஏற்கனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் அணைக்குள் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை தற்போது முழுமையாக வெளியே தெரிகிறது. தற்போது கர்நாடக அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் குறுவை பாசனத்திற்கு பயன்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்