
கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையில் ஒரே நாள் இரவில் 26 சென்டி மீட்டர் மழை பெய்ததால் அப்பகுதி முழுவதும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. அந்த மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலுமே கன மழை கொட்டித் தீர்த்தது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை சீசன் தொடங்கியதையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் முதல் கன மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கு பார்த்தாலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை சராசரியாக 17 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இன்று மூன்று மணி நேரம் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று பிற்பகலில் தொடங்கிய மழை விடிய,விடிய கொட்டித் தீர்த்தது. யாரும் எதிர்பாராத வகையில் பரங்பி பேட்டை பகுதியில் ஒரே இரவில் 26 சென்டிட்டர் மழை பெய்து அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளாகாடாக காட்சி அளிக்கிறது. இதே போன்று கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகரில் 24 சென்டிமீட்டம் மழையும், சதம்பரத்தில் 20 சென்டி மீட்டர் மழையும், காட்டு மன்னார்கோயில் பகுதியில் 14 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.