
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப் படும் போது, மலைக்குச் செல்ல முதலில் வரும் 2500 பக்தர்களை மட்டுமே மலை உச்சிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும். மகாதீபத்திற்கு மலை உச்சிக்கு செல்ல 2500 பக்தர்களை அனுமதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் வரும் 2ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. பொதுவாக தீபம் ஏற்றப் படும் போது, பக்தர்கள் மலை உச்சிக்குச் செல்வார்கள். ஆனால் இப்போது, தீபம் ஏற்றப் படும் நேரத்தில் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு தடைவிதித்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் கடந்த 7ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி, திருவண்ணாமலையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரவிசந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தீபம் ஏற்றும் நாளன்று மலைக்கு மேல் அதிகளவில் செல்லும் பக்தர்கள் கழிவுப்பொருட்களை அதிகம் போடுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப் படுகின்றது. மகாதீப நாளில் மக்கள் அதிக அளவில் மலையில் ஏறுவதால் அசம்பாவிதம் ஏதும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே மக்களின் பாதுகாப்பு கருதியும், தேவையற்ற சம்பவங்களைத் தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தடை விதிக்கப்பட்டது என்று கூறினார்.
இதன் பின்னர், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுந்தரேஷ், ‘கார்த்திகை தீப நாளில் மலைக்குச் செல்வது என்பது மக்களின் நம்பிக்கை. அதைத் தடுக்க முடியாது. மலைமேல் தீபம் ஏற்றுவது என்பது வழிவழியாக வந்த நம்பிக்கை நிகழ்வு. கார்த்திகை தீபம் ஏற்றப்படும் போது 40 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் மலைக்கு மேல் செல்கிறார்கள். இது நூற்றாண்டுகளாக நடைபெறுகிறது.
ஆனால் இப்போது ஏதோ சில காரணங்களைக் கூறி மலைக்குச் செல்ல தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. லட்சக்கணக்கான மக்கள் திரளுகின்றனர் என்று கூறி தடை செய்தால் எந்த மத நிகழ்வுகளையும் நடத்த முடியாது. மத நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கில் மக்கள் கூடும் போது, இது போன்ற நிகழ்வுகள் இந்தியா முழுவதும் நடக்கின்றன. கேரளத்தில் உள்ள சபரிமலையில் லட்சக்கணக்கில் மக்கள் ஏறும் போது இங்கே ஏன் செல்லக் கூடாது?’ என கேள்வி எழுப்பினார்.
’கோயில்களின் ஆகம விதிகளை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க முடியாது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் கட்டுப்படுத்த முடியவில்லை என அரசு கூறுவதும் ஏற்புடையதல்ல. அதற்கு பதில், உரிய வகையில் முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’” எனக் கூறினார்.
இந்த விசாரணை நேற்று நடைபெற்ற போது, மக்களை ஒட்டுமொத்தமாக லட்சக் கணக்கில் அனுப்ப இயலாவிட்டாலும், ஆயிரம் ஆயிரமாக அனுமதிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டார் நீதிபதி. இதனை அரசு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 2500 பக்தர்களை அனுமதிப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, காலை 6 மணி முதல் மலைக்கு ஏற பக்தர்களை அனுமதிக்க வேண்டும். மலை ஏறும் பக்தர்கள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். தண்ணீர் பாட்டில், நெய், கற்பூரம், தீப்பெட்டி என எதையும் எடுத்துச் செல்லக் கூடாது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கை நான்கு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.