வரும் 2024 புத்தாண்டு அனைவருக்கும், ஆரோக்கியமான, மகிழ்ச்சி பொங்கும் நலம் நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டு பொதுமக்கள் அனைவருக்கும், ஆரோக்கியமான, மகிழ்ச்சி பொங்கும் நலம் நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
நாளைய தினம், 2024 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக, இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளிலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து வருகிறோம். தமிழகம் முழுவதிலிருந்துமே, பாதிக்கப்பட்ட மக்கள் துயர் துடைக்க, ஜாதி, மதப் பாகுபாடுகள் இல்லாமல் ஆதரவுக் கரங்கள் நீண்டன. நம் மக்களின் இந்த இயல்பான சமத்துவமும், சகோதரத்துவமும் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும்.
பல ஆயிரம் கோடிகள் நம் வரிப்பணத்தைச் செலவு செய்தும், எந்தத் தவறுமே செய்யாமல் ஒவ்வொரு முறையும் மழை வெள்ளத்தால் நாம் பாதிக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி, முதன்முறையாக மக்கள் மத்தியில் எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆட்சியாளர்களின் தவறுகளைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் தொடர வேண்டும்.
பல ஆண்டுகளாக, மக்கள் வரிப்பணத்தை வெளிப்படையாக ஊழல் மூலம் கொள்ளையடித்தாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து வந்தவர்கள், நீண்ட காலம் தப்பிக்க முடியாது என்ற நம்பிக்கையை, நமது நீதித்துறை இந்த ஆண்டு உறுதிப்படுத்தியிருக்கிறது. மக்கள் பணத்தைக் கையாடல் செய்தவர்கள் அனைவருக்குமே நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இனியொரு முறை ஊழல் செய்யும் முன்பு, இதற்கான தண்டனை நிச்சயம் என்ற எண்ணம், ஊழல்வாதிகள் மத்தியில் உருவாகியிருப்பது மகிழ்ச்சி. மக்கள் வரிப்பணம் இனி மக்களுக்கே பயன்பட வேண்டும்.
மத்தியில் நேர்மையான, ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி, பாரத மக்களின் பேராதரவுடன், மூன்றாவது முறையாக வரும் 2024 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. கடந்த பத்து ஆண்டுகளாக, விவசாயிகள், மீனவர்கள், மகளிர், இளைஞர்கள், மாணவர்கள் என கோடிக்கணக்கான பொதுமக்கள் பலனடைந்துள்ள மத்திய அரசின் நலத்திட்டங்கள் வரும் ஆண்டுகளிலும் தொடரும்.
வரும் 2024 புத்தாண்டு, தமிழகத்திலும், நேர்மையான, பொதுமக்களுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அரசியல் மாற்றத்திற்கான நல்லாண்டாக உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும், ஆரோக்கியமான, மகிழ்ச்சி பொங்கும் நலம் நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்.
இவ்வாறு அண்ணாமலை தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.