
சந்தைக்கு விற்ப்பதற்க்காக கொண்டு சென்ற இரண்டு ஆடுகளை இரண்டாயிரம் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து ஏமாற்றிய வாலிபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
கொப்பள் மாவட்டம் கங்காவதி தாலுகா சகாபூர் கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி யல்லம்மா. இவர் சம்பவத்தன்று காலை பூதகுப்பா கிராமத்தில் நடைபெற்ற சந்தையில் தனக்கு சொந்தமான இரண்டு ஆடுகளை விற்பனைக்காக வைத்திருந்தார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் யல்லம்மாவிடம் ஆடுகளின் விலை குறித்து கேட்டனர். அதற்கு அவர் இரண்டு ஆடுகளின் விலை ரூ.10 ஆயிரம் என தெரிவித்தார். உடனே அந்த வாலிபர்கள் மறுபேச்சு பேசாமலும், பேரம் பேசாமலும் மூதாட்டி சொன்ன விலையான ரூ.10 ஆயிரத்துக்கு ஆடுகளை வாங்கினர்.
இதற்காக மூதாட்டிக்கு ஐந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து கொடுத்து விட்டு ஆடுகளை வாங்கிக்கொண்டு பறந்து சென்றனர். வியாபாரம் நல்லபடியாக முடிந்த மகிழ்ச்சியில் அந்த பணத்தில் வீட்டுக்கு தேவையான உணவு பொருட்கள் வாங்கிக்கொள்ள சந்தையில் உள்ள கடைக்கு யல்லம்மா சென்றார். அங்கு பொருட்கள் வாங்கிய பின் ரூ.2 ஆயிரம் நோட்டை கடைக்காரரிடம் கொடுத்துள்ளார்.
யல்லம்மா கொடுத்த பணத்தை கடைக்காரர் வாங்கி பார்த்தார். அப்போது அது கள்ள நோட்டு என தெரியவந்தது. இதை மூதாட்டியிடம் கொடுத்த கடைக்காரர், ஆயா, இது கள்ள நோட்டு. யாரோ உங்களை ஏமாற்றி இருக்கிறார்கள்' என்று கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த யல்லம்மா, போலீசில் புகார் அளித்தார்.