
கோயம்புத்தூர்
காவிரி நதிநீர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்தும், கர்நாடக சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு 14.75 டி.எம்.சி. தண்ணீரை குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த தீர்ப்பால் தமிழக டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கபப்டும் என்று கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள கர்நாடக சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கர்நாடக சங்க அலுவலகம் முன்பு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டது.
நேற்று மதியம் 3 மணிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் ஏராளமானோர் அந்த அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக கைகளில் கொடிகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியபடியும் வந்தனர்.
உடனே அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலாளர்கள் அந்த அலுவலகம் இருக்கும் இடத்தில் இருந்து சிறிது தொலைவுக்கு முன்பே, இரும்பினால் ஆன தடுப்புகளை வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து காவலாளர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சிலர் காவலாளர்கள் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை தாண்டி கர்நாடக சங்கஅலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அதில் சிலரை காவலாளர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட கு.ராமகிருட்டிணன், மாவட்ட தலைவர் வேலுசாமி, செயலாளர் அகில் குமாரவேல், மாநகர தலைவர் கோபால், பொருளாளர் ரஞ்சித்பிரபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர துணை செயலாளர் குரு உள்பட 20 பேரை காவலாளார்கள் கைது செய்தனர்.