
கோயம்புத்தூர்
கடன் தராததால் நண்பனை கத்தியால் குத்திய உயிர்நண்பன், தடுக்க வந்த மற்றொரு நண்பனையும் கத்தியால் குத்தினார். இதில், ஒரு நண்பன் உயிரிழந்தார். மற்றொருவர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
கோயம்புத்தூர் மாவட்டம், அப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயலிங்கம். இவருடைய மகன் பார்த்திபன் (25). இவர் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டு, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கோவையை அடுத்த வெள்ளக்கிணர் ஔசிங்க் யூனிட்டைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மகன் பிரவீன்குமார் (21). இவர் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வருகிறார். பாண்டியன் என்பவரின் மகன் அஜித்குமார் (20). இவர் மீன் கடையில் வேலை செய்து வருகிறார்.
பார்த்திபன், பிரவீன்குமார், அஜித்குமார் இவர்கள் மூவரும் உயிர்நண்பர்கள். இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், அஜித்குமார் தனது இருசக்கர வாகனத்திற்கு பணம் கட்ட வேண்டும் என்று பார்த்திபனிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் தர மறுத்து விட்டாராம்.
இதனையடுத்து அவர்கள் மூவரும் சாராயம் குடித்துவிட்டு துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது.
இதில் போதையில் ஆத்திரமடைந்த அஜித்குமார் தன்னிடம் இருந்த கத்தியால் பார்த்திபனை குத்தி உள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார் தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இதில் அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். உடனே அஜித்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பலத்த காயமடைந்த பார்த்திபன், பிரவீன்குமார் ஆகிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்திபன் உயிரிழந்தார். பிரவீன்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த தகவலின் பேரில் துடியலூர் காவலாளர்கள் வழக்கு பதிந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரவீன்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அஜித்குமாரையும் பிடித்து காவலாளார்கள் விசாரித்து வருகின்றனர்.
கடன் தராததால் நண்பர்களை, நண்பனே கத்தியால் குத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.