
கடந்த வாரம் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்து ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், தலைமை செயலகம் சென்ற அதிகாரிகள், அங்குள்ள அவரது அறையை சோதனை செய்தனர். அங்கிருந்தும், பல ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.
இதையடுத்து அதிகாரிகள், ராமமோகன ராவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். மேலும் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதற்கிடையில், நெஞ்சுவலி காரணமாக ராமமோகன ராவ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் ஆன அவர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். இதற்கு அனைத்து துறை ஐஏஎஸ் அதிகாரிகளும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள ராமமோகன ராவ் அறையில், சோதனை நடத்த வேண்டிய அவசியம் குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டியின் வீட்டில், பறிமுதல் செய்த ஆவணங்கள் அடிப்படையில், சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு சார்பில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரையும், அவரது நண்பர்களையும், சிபிஐ கைது செய்தது.
ரெட்டியின் வடநாட்டு நண்பர்களும், அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டனர். அதனால், தன் வீட்டுக்கு, சிபிஐ அல்லது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கைது செய்யும் அதிகாரம் படைத்த, மத்திய புலனாய்வு அமைப்புகள் வரலாம் என ராவ் சந்தேகம் அடைந்தார். இதனால், தான், 'நான், வேறு மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், விசாரணைக்காக வருவர் என எதிர்பார்த்தேன்' என, எங்களிடம் கூறினார்.
பெரும்பாலும், சோதனையிட செல்லும் இடங்களில், மொபைல் போன்களை, 'ஆப்' செய்யும்படி சொல்லி விடுவோம். ஆனால் ராவ், தலைமை செயலர் நிலையில் இருந்ததால், அவரை பேச அனுமதித்தோம். அப்போது அவர், தனி உதவியாளரை அழைத்து, கோட்டையில் உள்ள அறையில், 2 மொபைல் போன்கள் இருப்பதாகவும், அதை, டிரைவரிடம் எடுத்து கொடுக்கும்படியும் கூறினார்.
அதன் பிறகே, கோட்டையில் சோதனை நடத்த, வாரன்ட் தயார் செய்தோம். அந்த மொபைல் போன்களை, அவர் வீட்டுக்கு கொண்டு வருவதில்லை. சொந்த உபயோகத்திற்காக வைத்திருந்தார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.