10 நாட்களில் 2 மரணங்கள்.. காவல்துறை என்ன செய்ய வேண்டும்..?

By Ganesh RamachandranFirst Published Dec 9, 2021, 7:39 PM IST
Highlights

காவல்துறையினர் தாக்கப்படும் செய்தி வந்ததும் தற்காப்புக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள சொன்னார் டிஜிபி சைலேந்திர பாபு. இப்பொது காவல்துறையினரால் 2 மரணங்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனாலும் சைலேந்திர பாபு மௌனமாக உள்ளார்

விழுப்புரம் மாவட்டம் வடகரைத்தாழனூர் அருகே டாஸ்மாக் மதுபானக் கடை பின்புறம் பெட்டிக்கடை வைத்திருந்த்தவர் உலகநாதன். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அரகண்டநல்லூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் அவரது கடைக்கு சென்றுள்ளனர். அப்போது பயிற்சி டிஎஸ்பி ஒருவரும் இருந்ததாக கூறப்படுகிறது. அனுமதியின்றி பெட்டிக்கடை வைத்துள்ளதாகவும், கடையை அகற்றும் படியும் உலகநாதனிடம் அவர்கள் கூறியுள்ளனர். அப்போது போலீசார் உலகநாதனை பலமாகத் தாக்கியதாகவும், சவுக்கு கம்பால் அவரது மார்பில் குத்தியதாகவும், அதனால் உலகநாதன் மரணமடைந்ததாகவும் சம்பவம் நடந்தபோது உடனிருந்த அவரது மனைவியும், அவரது உறவினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் தாங்கள் தாக்கியதால் அவர் மரணமடையவில்லை, மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்று சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் கூறுகின்றனர்.

பெட்டிக்கடை நடத்திவந்த உலகநாதன்

உலகநாதனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் வெளியான பிறகே மரணத்துக்கான காரணம் போலீஸாரின் தாக்குதலா அல்லது மாரடைப்பா என்பது தெரியவரும். உலகநாதன் போலீசார் தாக்கி இறந்தார் என்று தெரியவந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர். எனவே அனைவரும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் என்ன முடிவு வரும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மற்றொரு மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாகனச் சோதனையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக இராமநாதபுரம் மாவட்டம் நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவரை, கீழத்தூவல் காவல்நிலைய காவலர்கள் அழைத்துச் சென்று விசாரித்தனர். காவல் நிலையத்திலிருந்து வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கு காவல்துறையினர் அடித்ததே காரணம் என்று கூறி உறவினர்கள் போராடி வருகின்றனர். போலீசார் இரும்புக் கம்பியால் முதுகு, பிறப்புறுப்பு ஆகியவற்றில் அடித்ததாக மணிகண்டன் தன்னிடம் கூறி அழுததாகவும், திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்ததாகவும் கூறுகிறார் அவரது தாயார். இந்த விவகாரத்தில் நீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகே மறு உடற்கூறாய்வு நடத்தப்பட்டுள்ளது.

மணிகண்டன் மரணத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என்று கோரி வருகின்றனர் அவரது உறவினர்கள்.

இந்த இரண்டு மரணங்களிலும் தமிழக காவல்துறையினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் வன்முறை அதிகரித்திருப்பதாக எதிர்கட்சிகள் போராடத்தொடங்கிவிட்டன. 10 நாட்களில் 2 மரணங்கள் போலீஸ் வன்முறையால் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் வந்தும், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மௌனமாகவே இருக்கிறார். இந்த குற்றச்சாட்டுகள் வந்த பிறகு அவர் பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க குண்டர் சட்டத்தை கையிலெடுப்பது பற்றி கூறியுள்ளார், ஏழை புற்றுநோயாளிகள் சிகிச்சைக்காக நிதி திரட்ட சைக்கிள் பயணத்தில் பங்கேற்றுள்ளார். இவை அனைத்துமே பாராட்டப்படவேண்டியவை. ஆனால், போலீஸ் வன்முறையால் இருவர் உயிரிழப்பு என்ற காவல்துறை மாண்பை கேள்விக்குள்ளாக்கும் குற்றச்சாட்டில் அவர் இது வரை என்ன செய்துள்ளார் ? என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுகிறது.

காவல்துறையினரின் பணிச்சுமை காரணமாக ஏற்படும் எரிச்சல், தனக்கு கீழே அனைவரும் என்ற மேட்டிமைத்தனம் ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நமக்கு புதிதல்ல. கடந்த காலங்களிலும் இவை நடந்துள்ளன. அவற்றை களைவதற்கு தமிழக காவல்துறை என்ன செய்துள்ளது என்று கேள்வி எழுப்புகின்றனர் சாமானியர்கள். ”காவல்துறை உங்கள் நண்பன்” என்பதை மக்களுக்கு நிரூபிக்கவேண்டியது டிஜிபி சைலேந்திர பாபுவின் கடமை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

click me!