
திருவாரூர்
திருவாரூரில், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் 175 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருவார காலமாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலை நிறுத்தம் காரணமாக, மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை சமாளிக்கும் வகையில், தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கப்பட்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேதாஜி சாலை அருகே ஒன்று கூடிய போக்குவரத்துத் தொழிலாளர்கள், அங்கிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.
இந்தப் பேரணியானது, பேருந்து நிலையம், மேம்பாலம் வழியாக தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்துக்கு வந்தடைந்தது. அங்கு முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்த 175 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.