மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் சட்டம் - வைகோ கண்டனம்

Asianet News Tamil  
Published : Dec 09, 2016, 08:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் சட்டம் - வைகோ கண்டனம்

சுருக்கம்

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் புதிய சட்டம் இயற்றப்பட உள்ளது. இதனை கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் டிசம்பர் 16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

 இதுதொடர்பாக வைகோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இலங்கை அரசின் கொடுமையால், தமிழக மீனவர்களின் வாழ்வு 40 ஆண்டுகளாக சிதைந்து சின்னாபின்னமாகி உள்ளது. ஒரு நாட்டின் குடிமகன், மற்றொரு நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டால், உயிரைப் பறிகொடுத்த நாடு வெளியுறவை துண்டிக்கும்.

ஆனால், ஆயிரக்கணக்கான முறை இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்குவதும், சுட்டுப் படுகொலை செய்வதும், படகுகளை உடைப்பதும், வலைகளைக் கிழித்து எறிவதும், தமிழக மீனவர்களை இலங்கை சிறைகளில் வதைப்பதும், படகுகளைச் சிறைப் பிடிப்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது.

இந்த பின்னணியில், இன்னும் ஒரு கொடூரமான அபாயம் தமிழக மீனவர்களின் தலைக்குமேல் பேரிடியாக விழக் காத்திருக்கிறது. கடந்த 1979ம் ஆண்டு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து தமிழக மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றுவதோடு, ஒரு படகுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.7 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டம், வரும் ஜனவரியில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

தமிழர்களின் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கும் இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை தடுக்க வேண்டிய முழுப் பொறுப்பும், கடமையும் மத்திய அரசுக்கு உண்டு. இலங்கை அரசின் இந்தச் சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் வரும் 16ம் தேதி மதிமுக சார்பில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்? ரொக்கப்பணம் உண்டா? அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!