
அரியலூர்
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரியலூர் மாவட்டத்தின் 15 கிராமங்களில் மக்கள் சேவை இயக்கத்தினர் கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
“அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்,
விவசாயிகள் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25 நாள்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவர்களது, போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், மக்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவுத் தெரிவித்துள்ளனர் மக்கள் சேவை இயக்கத்தினர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் கீழகாவட்டாங்குறிச்சி, கள்ளூர், திருப்பெயர், தட்டான்சாவடி, குந்தபுரம், மேலகாவட்டாங்குறிச்சி, சேனாபதி, முடிகொண்டான், அன்னிமங்கலம், அரண்மணைக்குறிச்சி, பாளையபாடி, கரைவெட்டி, பரதூர், வெங்கனூர், சன்னாவூர் உள்ளிட்ட 15 கிராமங்களில் மக்கள் சேவை இயக்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழகாவட்டாங்குறிச்சியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.
மாவட்ட விவசாய பிரிவு செயலர் அசோக்குமார், துணைச் செயலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் போராட்டத்தில், டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும், ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.