
மதுரை
சுற்றுலாப் பயணிகளைக் கவர, மதுரை மாநகராட்சியில் உள்ள 14 பாரம்பரிய இடங்களை ரூ.200 கோடியில் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
பொலிவுறு நகர் திட்டத்தில், மதுரை மாநகராட்சியில் ரூ.1142 கோடி சுற்றுலா மற்றும் மாநகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காகச் செலவிடப்பட உள்ளது. அதனடிப்படையில், புதிய பூங்காக்கள் அமைத்தும், ஏற்கெனவே உள்ள பூங்காக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட உள்ளதாகவும், மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்
இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட அறிக்கை:
“மதுரையில் “பொலிவுறு நகர்” திட்டம் மற்றும் “தூய்மை இந்தியா” திட்டத்தின் மூலம் பல மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பொலிவுறு நகர் திட்டத்தின் முதல் கட்டப் பணியாக பாரம்பரியமான 14 இடங்களைத் தேர்வு செய்து, அதை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ப அழகுபடுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.
மதுரை குன்னத்தூர் சத்திரம், நந்தி சிலை அருகே உள்ள எழுகடல் தெரு ராயகோபுரம், விட்டவாசல், விளக்குத்தூண், தெப்பக்குளம், பத்துத்தூண் உள்ளிட்ட 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலைய முகப்பில் உள்ள கோட்டை கொத்தளம் போல ராயகோபுரத்தின் மேற்பகுதியை அழகுபடுத்தி, அதில் சுற்றுலாப் பயணிகள் பார்க்க அனுமதிக்கும் வகையில் அழகுச் செடிகள், மின்விளக்குகள், மக்கள் அமரும் நாற்காலிகள் அமைக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு இடத்திலும் அதன் பாரம்பரியப் பெருமையை விளக்கும் விவரக் குறிப்பு பலகைகளும் இடம் பெறவுள்ளன.
சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில், ஒரே வண்ணத்தில் நடைபாதை அமைக்கப்படவுள்ளன” என்றுக் கூறினார்.