
தூத்துக்குடி
ஈரான் நாட்டில் உணவின்றித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை வலியுறுத்தி உள்ளது.
சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் ஜஸ்டின் ஆன்றனி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 15 மீனவர்கள் துபாய் நாட்டிலிருந்து மீன்பிடிக்க சென்றபோது எல்லை தாண்டியதாக கூறி ஈரான் கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.
பின்னர் அனைவரும் துறைமுக அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் அவர்களது விசைப்படகுகளிலேயே தங்க வைக்கப்பட்டனர்.
இந்த மீனவர்களை சட்டத்துக்கு புறம்பான மீன்பிடித்தொழில் செய்ய முதலாளி வற்புறுத்துவதாலும், இத்தொழிலை மேற்கொண்டு செய்தால் தங்களது எதிர்காலம் பாதிக்கக் கூடும் எனவும் இம்மீனவர்கள் பயப்படுவதால், மத்திய , மாநில அரசுகளுக்கு இந்த விவரம் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை மூலம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மீண்டும் துபாய் செல்ல விரும்பாத இம்மீனவர்களை உடனடியாக இந்தியா கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டது. கிராஸ்லின் என்ற மீனவர் நெஞ்சுவலியால் தொடர்ந்து அவதிப்பட்டதால் அவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் ஈரானில் தற்போது அடைபட்டிருக்கும் மற்ற 14 மீனவர்களும் உணவின்றி தவிப்பதாக சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இம்மீனவர்களில் பலருக்கும் விசா காலம் முடிவடைந்துள்ளதால், அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.