
தூத்துக்குடி
தூத்துக்குடியில் காவலாளர்கள் சுட்டதில் கொல்லப்பட்ட 13 பேரின் மரணத்திற்கு நீதி கேட்டு அ.குமரெட்டியபுரம் மக்கள் இன்று முதல் தினமும் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி முதல் அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
அவர்களின் போராட்டத்திற்கு மடத்தூர், பண்டாரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களும் ஆதரவு தெரிவித்தனர். அ.குமரெட்டியபுரம் மக்களின் போராட்டம் கடந்த 22-ஆம் தேதி 100-வது நாளை எட்டியது.
அப்போது, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போராட்டக்காரர்கள் மீது காவலாளர்கள் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தினர். இந்த கலவரத்தில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று மாலையில் ஊரின் மையப்பகுதியில் உள்ள மரத்தடி அருகே திரண்டனர்.
அவர்கள் போராட்டத்தில் பலியான 13 பேருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து போராட்டக்குழுவினர், "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இந்த போராட்டம் கைவிடப்படவில்லை. ஆலையில் உள்ள கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும்.
13 பேர் மரணத்திற்கு நீதி கேட்டும், போராட்டத்தின் மீது மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற கோரியும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள போராட்டமாக தினமும் 1 மணி நேரம் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படும்.
இந்த போராட்டங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடத்தப்படும்“ என்று கூறினார்.