
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆரம்பக்கட்டத்தில் பா.ஜ.க போராட்டம் நடத்திய போது மக்கள் ஆதரித்திருந்தால் நேற்று 13 பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் நாட்டு மக்களின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடந்த 100வது நாள் போராட்டத்திற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். இதனால் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 65 பேர் காயமடைந்துள்ளனர். சாதாரண உடை அணிந்த காவலர் போலீஸ் வேனில் இருந்தபடி போராட்டக்காரர்களால் துப்பாக்கியால் குறிபார்த்து சுடும் காட்சி அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது; தூத்துக்குடிக்கு இப்பொது செல்லும் திட்டமில்லை.
பொள்ளாச்சியில் நடைபெறும் மாநில செயற்குழுவில் கலந்து கொண்ட பின்னர் டெல்லி செல்ல இருக்கிறேன். பா.ஜ.க சார்பில் தூத்துகுடி செல்வது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதலில் போராடியது பா.ஜ.க. தான். தற்போது பல பேர் வேஷங்கள் போடுகின்றனர். இந்த ஆலை வரக்கூடாது என சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தியதும் பாஜகதான்.
ஆலைக்கு அன்று அனுமதி கொடுத்தல் உள்ளிட்டவை திமுக உட்பட மற்ற கட்சிகள் செய்த தவறு. தூத்துக்குடி சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இந்த துப்பாக்கி சூடு குறித்து பின்னணி என்ன என முழுமையாக தெரியாமல் பேச முடியாது. ஆனாலும் முழுமையாக ஆய்வுகள் நடத்த வேண்டும். காவல் துறை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இருக்க கூடியது என இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.