
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் தமிழகம் முழுவதும் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே மது அருந்திவிட்டோ அல்லது வேகமாகவோ வாகனங்களை ஓட்டுவதும் ஒரு கொண்டாட்டமாக இளைஞர்கள் மத்தியில் ஒரு எண்ணம் நிலவுகிறது. இதனால் ஆண்டுதோறும் விபத்துகளில் பலர் உயிரிழக்கின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் இதுபோன்ற விபத்துகள் ஆண்டுதோறும் நடந்த வண்ணம் தான் உள்ளன. பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டம் என்பதை வலியுறுத்தினாலும் விபத்துகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே சென்னையில் மெரினா, பெசண்ட் நகர், பாலவாக்கம் என கடற்கரைகளில் மக்கள் கூடி புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம். இருசக்கர வாகனங்களில் வேகமாக வாகனங்களை ஓட்டிக்கொண்டு புத்தாண்டு வாழ்த்துகளை கூறுவர்.
இந்நிலையில், சென்னையில் மட்டும் நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 176 இடங்களில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன விபத்துகள் ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டோர் ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, ராயப்பேட்டை ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.