HDFC வாடிக்கையாளர்கள் 100 பேர் வங்கி கணக்கில் தலா ரூ.13 கோடி... வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி!!

By Narendran SFirst Published May 29, 2022, 5:23 PM IST
Highlights

சென்னையில் HDFC வாடிக்கையாளர்கள் 100 பேரின் வங்கிக் கணக்கில், தலா ரூ.13 கோடி தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் HDFC வாடிக்கையாளர்கள் 100 பேரின் வங்கிக் கணக்கில், தலா ரூ.13 கோடி தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள HDFC வங்கி கிளையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் இணையவழியில் பணப்பரிவர்த்தனை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரது அக்கௌண்டில் 13 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதை பார்த்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக வாடிக்கையாளர் புகார் எண்ணுக்கு தொடர்பு கொண்டு 13 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது குறித்து தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து அதிகாரிகள் வங்கிக் கணக்குளை சரிபார்த்த போது, 100 வாடிக்கையாளர்களின் கணக்கில் தலா 13 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள், பணப் பரிமாற்றம் நடைபெற்ற 100 வங்கிக் கணக்குகளையும் உடனடியாக முடக்கியுள்ளனர். இதற்கு புதிய மென்பொருளை நிறுவிய போது ஏற்பட்ட குளறுபடியே காரணம் எனக் கூறப்படுகிறது. 100 பேரின் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி சென்ற நிலையில், உடனடியாக குறிப்பிட்ட 100 வங்கிக்கணக்கை அதிகாரிகள் தற்காலிகமாக முடக்கி விசாரணை நடத்தினர். மேலும் 100 பேரது  வங்கிக் கணக்கில் தலா 13 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது குறித்து  சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வங்கி தரப்பிலிருந்து இதுவரை முறையாக  புகார் அளிக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். சென்னை HDFC வங்கியில் 100 பேரின் வங்கி கணக்கில், தலா ரூ.13 கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே தொழில் நுட்ப கோளாறு காரணமாக பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதனிடையே, வங்கி சர்வரில் புதிய மென்பொருளை நிறுவியபோது, வாடிக்கையாளர்களின் பக்கத்தில் சில தகவல்களை அப்டேட் செய்யும் போது, வரவு பக்கத்தில் குழப்பம் ஏற்பட்டு பணம் வரவு வைக்கப்பட்டதாகவும், சில கிளைகளில் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அது விரைவில் சரி செய்யப்படும் எனவும் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

click me!