
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வினை 7,518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதினர்.
அதிகரித்த தேர்ச்சி விகிதம்
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். கடந்த ஆண்டுகளை விட காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12ம் வகுப்பு துணைத்தேர்வுகள்
இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 25-ம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெறும். அதற்கான தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மே 14-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவே துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மே 14-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.