110 செ.மீ. உயரமே கொண்ட பெண்ணிற்கு பிரசவம் பார்த்து அரசு மருத்துவர்கள் சாதனை!

By vinoth kumarFirst Published Sep 12, 2018, 8:08 AM IST
Highlights

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக 110 செ.மீ. உயரமே கொண்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். 

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக 110 செ.மீ. உயரமே கொண்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா கொளுந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 31) மாற்றுத்திறனாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (29), சுமார் 3½ அடி உயரம் கொண்டவர். இவர் அக்னொட்ரோபில்சியா எனும் எலும்பு வளர்ச்சி குறைந்து குள்ளமாக பிறக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர். 

மாரியப்பனுக்கும், உமாமகேஸ்வரிக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  இந்த நிலையில் உமாமகேஸ்வரி கர்ப்பமானார். பிரசவ வலி காரணமாக கடந்த 4-ம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எலும்பு வளர்ச்சி குறைவு நோயால் பாதிக்கப்பட்ட உமாமகேஸ்வரிக்கு மூச்சு திணறல் உட்பட பிரசவத்திற்கு தடையாக ஏராளமான சிக்கல்கள் இருந்தன. 

அவருக்கு மகப்பேறு துறைத்தலைவர் ராஜலட்சுமி தலைமையில் சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தனர். பல்வேறு இன்னல்களுக்கிடையே 4-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் உமாமகேஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 2 கிலோ 200 கிராம் எடை இருந்தது. ஆண் குழந்தைக்கு அருண்சந்தர் என பெயரிடப்பட்டது. 

இந்நிலையில் மருத்துவமனைக்கு நேரில் வந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் எலும்பு வளர்ச்சி குறையுள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அந்த குழந்தை நலமாக உள்ளது. டாக்டர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் என்றார். மேலும் அந்த குழந்தைக்கு ஒரு சவரன் தங்க சங்கிலியை அணிவித்ததோடு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொள்வதற்கான உறுதி கடிதத்தையும் உமாமகேஸ்வரியிடம் வழங்கினார்.

click me!