ஒரே நாளில் ரூ.1000 கோடி நஷ்டம் - 2வது நாளாக தொடரும் லாரி ஸ்ட்ரைக்

Asianet News Tamil  
Published : Mar 31, 2017, 09:59 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
ஒரே நாளில் ரூ.1000 கோடி நஷ்டம் - 2வது நாளாக தொடரும் லாரி ஸ்ட்ரைக்

சுருக்கம்

1000 crores loss due to lorry strike

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியது, சுங்க வரியை உயர்த்தியது  உள்பட பல்வேறு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் நேற்று அதிகாலை 6 மணி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 30 லட்சம் லாரிகள் செல்லவில்லை. தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் லாரிகள் ஓடவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்தும் வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

குறிப்பாக, அரிசி, பருப்பு, எண்ணெய், கோழி தீவனங்கள், முட்டைகள் போன்றவை எல்லா மாவட்டங்களிலும் தேங்கிக்கிடக்கின்றன. தமிழகத்தில் மட்டும் ரூ.1,500 கோடிக்கு சரக்குகள் தேங்கியுள்ளதாக தெரிகிறது.

இதையொட்டி தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ரூ.200 கோடியும், 6 மாநிலங்களிலும் சேர்த்து ரூ.1,000 கோடியும் நேற்று ஒரு நாள் மட்டும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தலைமையில் லாரி அதிபர்கள் நேற்று மதியம் சென்னை தலைமைச்செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கரை சந்தித்து பேசினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில், லாரி உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்து, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு அமைச்சர் காலஅவகாசம் கேட்டார்.

ஏற்கனவே 20  நாட்களுக்கு முன்பே தங்கள் கோரிக்கைகளை அரசிடம் அளித்துள்ளதாகவும், மேற்கொண்டு காலஅவகாசம் வழங்க முடியாது என்றும் லாரி உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்துவிட்டனர். இதனால்,  பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், இந்த போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மர்நிலங்களில் இருந்து தினமும் 400 லாரிகளில் காய்கறிகள் வருகிறது. நேற்று  காலை 6 மணிக்கு லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாகவே 300 லாரிகளில் காய்கறிகள் வந்து இறங்கின.

ஏற்கனவே, கடும்  வறட்சி காரணமாக பெரிய வெங்காயம், உருளைக்கிழக்கு ஆகியவற்றை தவிர மற்ற காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. தற்போது, காய்கறி வரத்தும் குறைந்துள்ளதால், 30 சதவீதம் வரை விலை  உயரும் என்று கூறுகின்றனர்.

கேரளாவில் லாரிகள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக இன்று ஒருநாள் தனியார் பஸ்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!
பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி