குடும்ப அட்டைதாரர்களின் வீடு வீடாக சென்று 100 சதவீதம் தணிக்கை…

First Published Dec 10, 2016, 11:08 AM IST
Highlights


சேலம்,

வறுமை நிலையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களை கண்டறிய, வீடு வீடாக சென்று 100 சதவீதம் தணிக்கை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் குடும்ப அட்டைகளை தணிக்கை செய்வதற்கான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சம்பத் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் சம்பத் கூறியதாவது:

“சேலம் மாவட்டத்தில் உள்ள வறுமை நிலையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களை கண்டறிதல் மற்றும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களுக்கு ஆதார் எண், செல்போன் எண் பதிவுசெய்தல் பணிகள் முழுமை அடையும் பொருட்டு குடும்ப அட்டையில் உள்ள நபர் பற்றிய விவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு குடும்ப அட்டையில் பெயர் பதிவு செய்யப்பட்டு ஆதார் பதிவு செய்யப்படாமல் இருந்தால் அந்த பெயருடைய நபர் அக்குடும்பத்துடன் வசித்து வருகிறாரா? என்பது உறுதி செய்யப்படுகிறது.

தகுதிவாய்ந்த பயனாளிகள் விடுபடாமலும், தகுதியற்ற நபர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்பதையும் தணிக்கையின் போது கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தணிக்கையின்போது குடும்ப அட்டை எண், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், கியாஸ் இணைப்புகள் போன்றவை சரியாக உள்ளதா? எனவும், ஆதார் அட்டை பெறப்படாமல் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வாறு ஆதார் அட்டை பெற வேண்டும் என்ற தகுந்த வழிமுறைகளை தெரிவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் முழுவதும் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர், கிராம பஞ்சாயத்து உதவியாளர்கள், கூட்டுறவுதுறைப் பணியாளர்கள் மற்றும் இதரதுறைப் பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகளுக்கு தணிக்கை அலுவலர்களை நியமனம் செய்து வறுமை நிலையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களை கண்டறிய வீடு வீடாக சென்று 100 சதவீதம் தணிக்கை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், கூட்டுறவுதுறை இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம. துரைமுருகன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பிச்சாண்டி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேவிகுமாரி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரவிக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தரம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

tags
click me!