
சூரமங்கலம்,
மூன்று நாள்கள் தொடர்ந்து மதுக்கடைகள் மூடப்பட்டதால், கோபமடைந்த மதுவெறியர்கள் டாஸ்மாக் கடையில் துளையிட்டு, மதுபாட்டில்களை திருடிவிட்டு டாஸ்மாக் கடைக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த 5–ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இயற்கை எய்தினார். அதனால், அன்று மாலை முதலே டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
மேலும், அரசு சார்பில் கடந்த 6–ஆம் தேதி முதல் 8–ஆம் தேதிவரை 3 நாள்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
மதுக்கடை அடைக்கப்பட்ட நாள்களில் மதுபிரியர்கள் மதுவுக்காக பல இடங்களில் அலைந்தும் கிடைக்கவில்லை. தினமும் மது குடிக்கும் வழக்கத்திற்கு மாறிய மக்கள், மதுயில்லாமல் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதில், அளவோடு குடிக்கும் மதுபிரியர்களுக்கு மூன்று நாள் மதுயில்லை என்பது சாதாரணமாக சென்றுவிட்டது. ஆனால், மதுவை வெறித்தனமாக நேசிக்கும் மக்கள், மதுயில்லாமல் மாக்களாக மாறியுள்ளனர்.
இந்த நிலையில், சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடியதுடன் அந்த கடைக்கு தீ வைத்து விட்டு சென்றுள்ளனர் சில மதுவெறியர்கள்.
சேலம் – இரும்பாலை பிரதான சாலையில் ஜாகீர் அம்மாபாளையத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது. மூன்று நாள்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று பகல் 12 மணிக்கு மதுக்கடையை திறக்கப்பட வேண்டும். ஆனால், நேற்று அதிகாலையில் அந்த டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பற்றியது.
அதைப் பார்த்த பொதுமக்கள் சேலம் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினரும், சூரமங்கலம் போலீசாரும் விரைந்து வந்தனர்.
மேலும் சேலம் மண்டல டாஸ்மாக் மேலாளர் தெய்வநாயகியும் விரைந்து வந்தார். பின்னர், தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என காவலாளர்கள் கடைக்குள் சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
டாஸ்மாக் மதுக்கடையின் பின்புறம் உள்ள சுவற்றில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளையிட்டு கடைக்குள் புகுந்து, கடையில் இருந்த மதுபாட்டில்களை திருடிவிட்டு, கடை முழுவதும் மிளகாய்பொடி தூவி இருக்கிறார்கள்.
அதன்பின்னர், கடைக்கு தீ வைத்து விட்டு மதுவெறியர்கள் தப்பி இருக்கிறார்கள். தீ விபத்தால், டாஸ்மாக் மதுக்கடையில் இருந்த ஏனைய மதுபாட்டில்கள் அனைத்தும் வெடித்து சிதறின.
மேலும் மது எரியும் தன்மை உடையது என்பதால், தீ மளமளவென எரியத் தொடங்கி உள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி டாஸ்மாக் மதுக்கடைக்கு மூன்று நாள்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டதால் இப்படியொரு வெறிச்செயலை செய்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.
மேலும், இதுகுறித்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.