
தஞ்சாவூர்
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூரில் இரயில் மறியல் ஈடுபட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 100 பேரை காவலாளார்கள் கைது செய்தனர்.
"விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.
மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், பழனி - ஈரோடு இரயில் பாதை திட்டம், காரைக்குடி - தூத்துக்குடி இரயில் பாதை திட்டம், சென்னை கிழக்கு கடற்கரை சாலை இரயில் பாதை திட்டம், தஞ்சை - புதுக்கோட்டை இரயில் பாதை திட்டம் குறித்தும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்தும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்காததை கண்டித்தும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் தஞ்சாவூர் மாவட்டம், இரயிலடியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் சரீப் தலைமை வகித்தார். இதில் பொதுச் செயலாளர் ஆதிதிராவிடர், துணைத் தலைவர் வெற்றிச்செல்வன், பொருளாளர் நஜ்முதீன், அமைப்பு செயலாளர் தர்மலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் ஷாஜகான், இளைஞரணி செயலாளர் சபிஅகமது உள்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர், இவர்கள் அனைவரும் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தஞ்சை இரயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இவர்கள் இரயில் நிலையத்திற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், இரும்பு கம்பிகளாலான தடுப்புகளும் இரயில் நிலைய நுழைவு வாயிலைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தடுப்புகள் அருகே தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் வந்தபோது அவர்களை காவலாளர்கள் மறித்து கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 64 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரீப், "கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 13 இரயில்வே திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களின் முதல் மந்திரிகள் தங்களது மாநிலம் புறக்கணிக்கப்பட்டு உள்ளதைக் கண்டித்து போராடுகின்றனர். ஆனால், தமிழகஅரசு தூங்கி கொண்டிருக்கிறது.
தமிழக அரசை தட்டி எழுப்பவும், தமிழகத்தை புறக்கணிக்கும் மத்தியஅரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடை பெற்றது" என்று அவர் தெரிவித்தார்.