
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் இவர், நேற்று விடுமுறை தினம் என்பதால் உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக வெளியூர் சென்றிருந்தார்.
வேலுச்சாமி வெளியூர் சென்றதை கண்டறிந்த மர்ம நபர்கள், இதனைப் பயன்படுத்திக் கொண்டு நேற்றிரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பீரோவில் இருந்த 100 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
இதற்கிடையே இன்று காலை சங்கரன்கோவில் வந்த வேலுச்சாமி, வீ்ட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வேலுச்சாமி அளித்த புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் மர்ம நபர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற
இத்துணிகர கொள்ளைச் சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.