சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய கருத்து பரவலாக பலரால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உதயநிதியின் தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் தருவதாக உத்தர பிரதேச சாமியார் ஒருவர் சர்ச்சை கருத்தை வெளியிட்டிருந்தார்.
கடந்த சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற "சனாதன ஒழிப்பு மாநாட்டில்" பங்கேற்று பேசினார் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அப்போது "கொசு, டெங்கு, கொரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது, அதனை ஒழித்து விட வேண்டும், அதேபோலத்தான் இந்த சனாதனமும், அதை எதிர்க்கக் கூடாது ஒழிக்க வேண்டும் அதுதான் நாம் செய்ய வேண்டியது" என்று தனது உரையில் சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று சர்ச்சையான ஒரு கருத்தை வெளியிட்ட அதுவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சாமியார் பேச்சுக்கு பதில் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை பற்றி பேசியதற்காக உத்தர பிரதசேத்தில் ஒரு சாமியார், அவர் பெயர் பரமஹன்ஸ ஆச்சார்யா, என் தலையை சீவினால் 10 கோடி ரூபாய் தருகிறேன் என்று அறிவித்துள்ளார்.
10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும், நானே என் தலையை சீவிக்கொள்வேன். இதெல்லாம் எங்களுக்கு புதிதல்ல. இப்படித்தான் ஒரு வடநாட்டுச் சாமியார் கலைஞர் அவர்களின் தலையை சீவினால் 1 கோடி என்று விலை வைத்தார்.
நானே என் தலையை சீவிக்கொள்ள முடியவில்லை. அவர் வந்து எப்படி சீவுவார் என்று கலைஞர் அவர்கள் கேட்டார்கள். ஆகவே, இந்த மிரட்டுலுக்கெல்லாம் பயப்படுகிறவர்கள் நாங்கள் இல்லை. தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கலைஞரின் பேரன் நான். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் பயப்பட மாட்டேன்.
இவ்வாறு தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு கழக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு! ஆவேசமான உ.பி. சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா!