
தமிழகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 10 இடங்களில் தடுப்பணைகள் கட்டினால் 500 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது என அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் சுவாமி இராமானந்தா தெரிவித்தார்.
அன்னை காவிரிக்கு திருவிழா எடுக்கும் வகையில் 6-ஆவது ஆண்டாக அகில பாரத துறவியர் சங்கம் சார்பில் நடைபெறும் விழிப்புணர்வு இரத யாத்திரை கடந்த 24-ஆம் தேதி தலைக்காவிரியில் தொடங்கியது.
மழைக் காலங்களில் வீணாகக் கடலில் தண்ணீர் சென்று கலப்பதைத் தடுக்க அதிகளவில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். காவிரிக்கு தனி அமைச்சகம் உருவாக்குவதோடு, கங்கையை நிதி ஒதுக்கப்பட்டது போன்று காவிரியைத் தூய்மைப்படுத்தவும் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த யாத்திரை நடைபெற்றது.
இந்த யாத்திரை குமாரபாளையத்துக்கு திங்கள்கிழமை வந்தது. அதைத் தொடர்ந்து குமாரபாளையம் இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் காவிரித் தாய்க்கு திருவிளக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில், பங்கேற்ற அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் சுவாமி இராமானந்தா, “தமிழகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 10 இடங்களில் தடுப்பணைகள் கட்டினால் 500 ஆண்டுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. மேலும், கடந்த 2005, 2008 ஆண்டுகளின் மழையளவைக் கருத்தில் கொண்டால் காவிரியில் வெளியேறிய 100 டிஎம்சி தண்ணீரை சேமித்திருக்க முடியும்.
தற்போது முதல்கட்டமாக திருவையாறு உள்பட 3 இடங்களில் மாதிரி தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. காவிரி ஆற்றில் பவானி கூடுதுறை, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தூய்மையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
நம்ம குமாரபாளையம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஓம் சரவணா, உலக சமாதான ஆலயம், அமாவாசை வழிபாட்டுக் குழு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கொடுமுடி, திருச்சி, மயிலாடுதுறை வழியாக நவம்பர் 13-இல் பூம்புகாரில் யாத்திரை நிறைவு பெறுகிறது.