எப்பா… 100 ஆண்டுகளுக்கு பிறகு ராணிப்பேட்டை பாலாற்றில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு!!

By Narendran SFirst Published Nov 19, 2021, 11:03 AM IST
Highlights

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாலாற்றில் 84 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் மேலும் 20 ஆயிரம் கன அடி உயர்த்தப்பட்டு ஒரு லட்சத்து 4 ஆயிரம் கன அடியாக நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாலாற்றில் 84 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் மேலும் 20 ஆயிரம் கன அடி உயர்த்தப்பட்டு  ஒரு லட்சத்து 4 ஆயிரம் கன அடியாக நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பியதோடு வெள்ளம் ஏற்பட்டது. அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தது. இதனால் பல அணைகளில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளன. அந்த வகையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் உபரிநீர் திறப்பும் அதே அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதாலும், தமிழ்நாடு, கர்நாடகா, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியில் இருந்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனிடையே தென்மேற்கு வங்கக் கடலில் சென்னைக்கு சுமார் 100 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை சென்னை - புதுச்சேரி பகுதியில் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதை அடுத்து வாலாஜா அருகே அணைக்கட்டு தடுப்பணை முழுமையாக நிரம்பியது. அணைக்கட்டு தடுப்பணைக்கு வரும் 98,154 கன அடி தண்ணீர் அப்படியே பாலாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு வினாடிக்கு 65 ஆயிரத்துக்கும் அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திருவல்லம் வழியாக பாய்ந்து வரும் பொன்னை ஆறு மேல்விஷாரம் அருகே பாலாற்றில் கலக்கிறது. இந்நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாலாற்றில் 84 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வாலாஜா தடுப்பணைக்கு வந்து கொண்டிருந்தது.

இதனையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள முகாம்களுக்கு வருவாய்த் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நள்ளிரவில் கொட்டும் மழைக்கு இடையில் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் தற்போது பாலாறு மற்றும் பொன்னை ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு நீர் வரத்து மேலும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால்  வாலாஜா தடுப்பணைக்கு திறந்து விடப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 84 ஆயிரம் கன அடியிலிருந்து மேலும் 20 ஆயிரம் கன அடி உயர்த்தப்பட்டு  ஒரு லட்சத்து 4 ஆயிரம் கன அடியாக நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்முள்ளது. 

click me!