
அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் என்ற முறையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நேற்று முளைத்த காளான்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் டிடிவி தினகரன் கட்சியில் இருந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். அவர்களை யாரும் குழப்ப முடியாது. ஜெயலலிதா காலத்திலேயே பொருளாளராக பதவி வகித்தவன் நான்.
தேர்தல் ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் ஒன்று தாக்கல் செய்து விட்டு 420 போல் பேசுபவர்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும். அதிமுக விதிகளை திரித்து அறிக்கை வெளிட்டுள்ளனர்.
அதிமுக தொண்டர்களை ஏமாற்ற முடியாது. என்னை வெளியேற்ற வேறு யாரும் அழுத்தம் கொடுப்பதாக நினைக்கவில்லை. அமைச்சர்களே பயப்படுகிறார்கள். எடப்பாடி அணியினர், பொய்யான தகவல்களை மீடியாக்களுக்கு தெரிவித்து வருகினறனர்.
எம்.ஜி.ஆரின் காலத்துக்குப் பிறகு, ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட காலத்தில் பொருளாளராக இருந்தேன். சிலரின் சதியால் அந்த பதவியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாமல் இருந்தேன்.
இந்த இக்கட்டான நிலையில் நான் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளேன். கிடைத்ததை சுருட்டிக்கொண்டு பொறுப்பற்ற நிலையில் அவர்கள் உள்ளனர்.
எடப்பாடி அணியினர் மடியில் கனம் இருப்பதால், தற்போது அவர்கள் அச்சப்படுகின்றனர். யாரோ ஒரு சிலருக்காக எனது பயணம் நிற்காது. நேற்று முளைத்த காளான்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை.
அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் என்ற முறையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நான், துணை பொது செயலாளராக செயல்பட எந்தவித தடையும் இல்லை. தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.