அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு... அதிமுகவை உதறி தள்ளிய நீண்ட நாள் கூட்டணி கட்சி!

By Asianet TamilFirst Published Mar 7, 2019, 9:56 AM IST
Highlights

அதிமுக - பாஜக கூட்டணி என்பது மாநில அரசுக்கும் மாநில மக்களின் உரிமைக்கும் எதிரானது. எனவே அதிமுக கூட்டணிக்கு எப்படி ஆதரவு கொடுக்க முடியும்? 

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த அதிமுகவை ஆதரிக்க முடியாது என அதிமுகவின் நீண்ட நாள் கூட்டணி கட்சியாக இருந்த இந்தியக் குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது.


அதிமுகவின் நீண்ட நாள் கூட்டணி கட்சி செ.கு. தமிழரசன் தலைவராக உள்ள இந்தியக் குடியரசுக் கட்சி. 2011-ம் ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர். சட்டப்பேரவையில் மட்டுமல்லாமல், பொதுவெளியிலும் அதிமுகவின் குரலாக ஒலித்துவந்தவர். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை ஜெயலலிதா ஒதுக்கினார். அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இருந்தாலும் அதிமுகவுடன் மிக நெருக்கமாகவே இருந்துவந்தார். சமீப காலமாக அதிமுக சார்பிலிருந்து விலகியிருந்தார் தமிழரசன். இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவில்லை என்று அறிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் செ.கு. தமிழரசன் பேசும்போது, “பாஜகவின் துணை அமைப்பாகவே தற்போது அதிமுக மாறிவிட்டது. அதிமுக - பாஜக கூட்டணி என்பது மாநில அரசுக்கும் மாநில மக்களின் உரிமைக்கும் எதிரானது. எனவே அதிமுக கூட்டணிக்கு எப்படி ஆதரவு கொடுக்க முடியும்? பல்வேறு முரண்பாடுகளை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் முடியாது. இதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மாநில தலைமைகளுடன் சேர்ந்த மதசார்பற்ற தன்மை கொண்ட கூட்டாட்சி தலைமையில்தான் மத்தியில் ஆட்சி அமையும்” என்று தெரிவித்தார்.

click me!