இனி இரண்டு பேருக்கு மேல் பைக்கில் சென்றால் அதிரடி நடவடிக்கை தான்...! எச்சரிக்கை விடுக்கும் காவல்துறை..!

By Manikandan S R SFirst Published Nov 2, 2019, 5:10 PM IST
Highlights

சிலர் இன்னமும் போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓடுவது, மதுபோதையில் செல்வது, இருசக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் செல்வது என்று விதிமீறலில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்தியாவில் வாகன விபத்துகளில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை அடுத்து போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்காக புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் வாகன விதிகளை மீறி செயல்படுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகைகள் பலமடங்கு உயர்த்தப்பட்டது. 

இதையடுத்து வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க தொடங்கியிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. எனினும் சிலர் இன்னமும் போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓடுவது, மதுபோதையில் செல்வது, இருசக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் செல்வது என்று விதிமீறலில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இருசக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் செல்பவர்களால் அதிக விபத்து ஏற்படுவதாகவும், அவ்வாறு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வில்லியனூர் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வில்லியனூர்- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில்  தினந்தோறும் சிறுசிறு மோட்டார் சைக்கிள் விபத்துகள் நடைபெறுவதாகவும் ஒரே மோட்டார் சைக்கிளில் 3-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து அதிவேகமாக செல்வதே அதற்கு காரணம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதன்காரணமாக இனி மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் பயணம் மேற்கொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுபோல் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

click me!