இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா லாக்டவுன் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் கல்வி ஆண்டு நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தான் தொடங்கப்பட்டது.
பொதுத்தேர்வு காரணமாக தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும். தினமும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட எக்கச்சக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மேற்குறிப்பிட்ட ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
a