விழுப்புரத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, 11 கிராமங்கள் தனிமைப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, 11 கிராமங்கள் தனிமைப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் என்றும் இல்லாத அளவுக்கு நேற்று 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1,257 பேரும், கோவையில் 142 பேரும், மதுரையில் 88, விழுப்புரத்தில் 53 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தொற்றுள்ள கிராம பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஆவுடையார்பட்டு, பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூர், ராம்பாக்கம். கயத்தாறு, குத்தாம்பூண்டி, தும்பூர், பூண்டி, கஸ்பா காரணை, அசோகபுரி ஆகிய 11 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு வெளிநபர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாக உள்ளதால் அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று நிலவரம் குறித்து அரசுத் தரப்பில் மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கிராமத்தில் உள்ள வங்கிகள் , மின்வாரிய அலுவலகம் ஆகியவற்றை மூடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசு அறிவித்த ஆரஞ்சு மண்டலத்திலிருந்த விழுப்புரம் மாவட்டம் சிகப்பு மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.