திண்டிவனத்தில் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் வந்தவரிடமிருந்து அவரது மனைவி மற்றும் கைக்குழந்தைக்கு கொரோனா பரவிய சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 1885 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 1020 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சை பணிகளும் தடுப்பு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதுடன் அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர்.
undefined
தமிழ்நாடு கொரோனா தடுப்பில் சிறப்பாக செயல்பட்டாலும், கொரோனா அறிகுறி இல்லாமலேயே உறுதியாவது, நெகட்டிவ் வந்தவர்களுக்கு மீண்டும் பாசிட்டிவ் வருவது, பாசிட்டிவ் வந்தவர்களுக்கு மறுநாளே வேறு ஒரு டெஸ்ட்டிங் கருவியில் நெகட்டிவ் வருவது என நிறைய குழப்பங்கள் உள்ளன.
இவையெல்லாம் மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதுடன், கொரோனா தடுப்பு பணிகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது. நேற்று ஓசூரில் கொரோனா பாசிட்டிவ் என வந்தவரது ரத்த மாதிரிகள் சென்னையில் பரிசோதிக்கப்பட்டபோது நெகட்டிவ் என்று வந்துள்ளது.
இந்நிலையில் திண்டிவனத்தில் அதிர்ச்சிகரமான மற்றும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திண்டிவனத்தை சேர்ந்த 48 வயது நபர், டெல்லிக்கு சென்று திரும்பியவர். அவருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டபோது, நெகட்டிவ் என வந்துள்ளது. இதையடுத்து வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுமாறு அறிவுறுத்தி மருத்துவர்கள், அவரை அனுப்பிவிட்டனர். அவரும் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
28 நாட்கள் தனிமைக்காலத்தை அவர் முடித்துவிட்ட நிலையில், அவரது 38 வயது மனைவி மற்றும் 7 மாத குழந்தை ஆகிய இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா இல்லையென்பதால் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட நபரிடமிருந்து அவரது மனைவிக்கும் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது மருத்துவர்களை குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.