கொரோனாவிலும் கஞ்சா விற்கும் பெண்ணை அலேக்காக தூக்கிய போலீஸ்... பெண் காவலருக்கு கத்திக்குத்து...!

By Kanimozhi PannerselvamFirst Published May 19, 2020, 6:40 PM IST
Highlights

இதையடுத்து வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், காவல் ஆய்வாலர் கவிதா உள்ளிட்ட போலீசார், கஞ்சா வியாபாரி மகேஸ்வரியின் வீட்டை சுற்றி வளைத்தனர். 

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக மே 31ம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை முன்னிட்டு தமிழகத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் உச்ச நீதிமன்ற அனுமதியுடன் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக போதை தேடி அலைந்த குடிமகன்களால் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்டவற்றின் விற்பனை ஜோராக நடைபெற்றது. இதனை தடுப்பதற்காக சட்டவிரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் வாணியம்பாடி நேதாஜி நகரில் வசித்து வரும் பிரபல சாராய வியாபாரியான மகேஸ்வரி என்பவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், காவல் ஆய்வாலர் கவிதா உள்ளிட்ட போலீசார், கஞ்சா வியாபாரி மகேஸ்வரியின் வீட்டை சுற்றி வளைத்தனர். அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 21 கிலோ கஞ்சா, ரூ.20 லட்சம் ரொக்கம், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன், காவியா உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

இந்த கைது நடவடிக்கையின் போது சாராய கும்பலை சேர்ந்தவர்கள் பெண் காவலர் சூர்யா மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் படுகாயம் அடைந்த பெண் காவலர் சூர்யா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை வாணியம்பாடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கஞ்சா வியாபாரி மகேஸ்வரி கஞ்சா விற்பனை மூலமாக ஏராளமான சொத்து சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கஞ்சா விற்று சேர்த்த சொத்துக்களின் மதிப்பீடு குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது வரையில் சுமார் 40 அசையா சொத்துகளின் ஆவணங்கள் எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படி கஞ்சா விற்பனை மூலம் சம்பாதித்த சொத்துகள் அனைத்தும் அரசுக்கு உரிமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

 

click me!