வியாபாரிகளின் பழக்கூடைகளை தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரி..! வைரலாகும் வீடியோ..!

By Manikandan S R SFirst Published May 13, 2020, 9:28 AM IST
Highlights

திடீரென தள்ளு வண்டிகளை தள்ளிவிட்டும் பொருள்களை காலால் எட்டி உதைத்தும் ஆணையர் தாமஸ் அராஜகம் செய்திருக்கிறார். அதை அங்கிருந்த சிலர் காணொளியாக பதிவு செய்யவே அது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது.

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு தற்போது நான்காவது கட்டத்தை எட்டி இருக்கிறது. எனினும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வண்ணம் ஊரடங்கு நடைமுறைகளில் ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மத்திய அரசின் அனுமதியுடன் தமிழகத்தில் கடைகள், சிறு குறு தொழில்களை நடத்த அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஏற்கனவே காய்கறிகள், மளிகை கடைகள், மருத்துவமனைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் அனைத்தும் ஊரடங்கு நாட்களிலும் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்த சாலையோர வியாபாரிகளின் தள்ளுவண்டியை தள்ளிவிட்ட நகராட்சி ஆணையரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி ஆணையராக இருப்பவர் சிசில் தாமஸ். நேற்று அப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சாலையோரத்தில் வியாபாரிகள் சிலர் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த தாமஸ் விதிகளை மீறி விற்பனை செய்வதாக அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு வாழ்வாதத்திற்க்காக தட்டு வண்டியில் வியாபாரம் செய்த ஏழை மக்கள்..! ஊரடங்கு விதிகளை மீறியதாகக்கூறி வியாபாரிகளிடம் இருக்கும் பழங்களைச் சாலையில் வீசிய வாணியம்பாடி நகராட்சி ஆணையரின் ரவுடிதனமான செயல் pic.twitter.com/DcJEcAOUl1

— HAJ Sadick (@SellaRaja18)

 

அவரிடம் வியாபரிகள் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தள்ளு வண்டிகள், பழக்கூடைகளை தள்ளிவிட்டும் பொருள்களை காலால் எட்டி உதைத்தும் ஆணையர் தாமஸ் அராஜகம் செய்திருக்கிறார். அதை அங்கிருந்த சிலர் காணொளியாக பதிவு செய்யவே அது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது. வியாபாரிகள் விதிகளை மீறி நடந்திருந்தாலும் கூட நகராட்சி ஆணையர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர இவ்வாறு மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் தனது செயலுக்கு நகராட்சி ஆணையர் தாமஸ் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

click me!