முறையான சாலை வசதிகள் இல்லாததால் மலைகிராமத்திற்கு கழுதைகளில் பொங்கல் பரிசு ஏற்றி கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருக்கிறது நெக்னாமலை கிராமம். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடல்மட்டத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் இருக்கும் இக் கிராமத்திற்கு பல வருடங்களாக முறையான சாலை வசதிகள் இல்லை என கிராமவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி மின்வசதி,கல்வி,மருத்துவம் போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
undefined
இந்தநிலையில் தமிழக அரசு அறிவித்திருக்கும் பொங்கல் பரிசு, கழுதையில் ஏற்றி மலைகிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்று காலையில் மலையடிவாரத்திற்கு பொங்கல் பரிசுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்டு வந்தனர். பின் அங்கு வரவழைக்கப்பட்ட கழுதைகளில் அவை ஏற்றப்பட்டு சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சுமந்து கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
அண்மையில் வாலிபர் ஒருவர் கோவையில் மின்சாரம் தாக்கி இறந்து விட அவரது உடலை பல கிலோமீட்டர் தூரத்திற்கு மலை மேல் சுமந்து சென்ற அவலம் நிகழ்ந்தது. இதுதொடர்பான செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அதன்பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இனியாவது சாலை வசதி உள்ளிட்ட முறையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.