களைகட்டும் தமிழர் திருநாள்..! மஞ்சு விரட்டிற்கு அசுர வேகத்தில் தயாராகும் காளைகள்..!

By Manikandan S R SFirst Published Dec 14, 2019, 5:04 PM IST
Highlights

மஞ்சு விரட்டிற்காக வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் காளை மாடுகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மணல் குவியல்களை குத்தி கிளறுதல் போன்ற பயிற்சிகளில் காளை மாடுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

தை முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே பொங்கல் விழா களைகட்ட தொடங்கி விடும். 2020 ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ம் தேதி இருந்து தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக மாட்டுபொங்கலும் கொண்டாடப் படுகிறது.

விவசாய பயன்பாட்டிற்காக வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளான காளை மாடுகள் மற்றும் பசுக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இப்பண்டிகை கொண்டாடப்படும். மாட்டுப் பொங்கல் நாளன்று பொங்கல் வைத்து படையலிட்டு கால்நடைகளை மக்கள் வணங்குவார்கள். அதே நாளில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற தமிழர் பாரம்பரியமிக்க வீர விளையாட்டுகள் நடைபெறும். தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு வெகுவிமரிசையாக நடைபெறும்.

அதே போல வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய இடங்களில் மஞ்சு விரட்டு எனப்படும் எருது விடும் திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டின் மஞ்சு விரட்டிற்காக வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் காளை மாடுகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மணல் குவியல்களை குத்தி கிளறுதல் போன்ற பயிற்சிகளில் காளை மாடுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

மேலும் மஞ்சு விரட்டில் பங்கேற்கும் காளைகளின் விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

click me!