மார்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கிச் சென்ற சம்பவம்.. பின்னணியில் மணற்கொள்ளை.. திடுக்கிடும் தகவல்!!

By Asianet Tamil  |  First Published Sep 21, 2019, 1:21 PM IST

வேலூர் அருகே இறந்து போன மூதாட்டி ஒருவரின் உடலை கொண்டு செல்ல சரியான பாதை வசதி இல்லாத காரணத்தால் ஆற்றுநீரில் சுமந்தபடி கொண்டு சென்ற சம்பவத்தின் பின்னணியில் மணற்கொள்ளை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட ஒடுக்கத்தூர் அருகே இருக்கிறது சேர்பாடி கிராமம். இந்த கிராமத்தில் இறந்து போனவர்களை அடக்கம் செய்யும் மயானம் கானாற்றை கடந்து இருக்கிறது. ஆற்றில் இருக்கும் பாலம் பல நாட்களாக உடைந்து சீரமைக்காமல் இருப்பதாக தெரிகிறது.

Latest Videos

undefined

இந்த நிலையில் அந்த ஆற்றில் அதிகமான மணற்கொள்ளை நடப்பதாக அந்த கிராமத்து மக்களால் கூறப்படுகிறது. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடாமல் ஒரே இடத்தில் தேங்கி கிடக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் துணையோடு மணற்கொள்ளை நடப்பதால் காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தண்ணீர் தேங்கி கிடப்பதால் ஆற்று நீரில் இறங்கி மயானத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

இதனிடையே இந்த கிராமத்தை சேர்ந்த பச்சையம்மாள் என்கிற 80 வயது மூதாட்டி வயது மூப்பு காரணமாக நேற்று மரணமடைந்து இருந்திருக்கிறார். இதனால் அவருக்கு இறுதி சடங்கு செய்ய அவரது மகன்கள் ஏற்பாடு செய்தனர். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. 

தற்போது அந்த பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், மயானத்திற்கு கொண்டு செல்லும் வழியில் இருக்கும் ஆற்றில் மணற்கொள்ளை காரணமாக தண்ணீர் அதிகமாக தேங்கி இருக்கிறது. 
பாலம் உடைந்து மயானத்திற்கு செல்ல மாற்றுப்பாதை எதுவும் இல்லாததால் தேங்கி இருக்கும் நீரில் நீந்தியபடி மூதாட்டியின் சடலத்தை கொண்டு செல்ல கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி மார்பளவு தண்ணீரில் பச்சையம்மாள் உடலை சேர்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று மயானத்தில் எரியூட்டினர்.

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவகத்தில் அளித்த புகாரில் " மீண்டும் பாலம் வசதி ஏற்படுத்தி தருவது குறித்தும் ஆற்றில் நடக்கும் மணற்கொள்ளை சம்பந்தமாகவும் பலமுறை அரசுக்கு தெரிவித்தும்  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி, உயிரிழப்பவர்களின் உடல்களை கொண்டு செல்ல மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அரசு இதை கவனத்தில் கொண்டு உடனடியாக பாலத்தை சீரமைப்பதோடு மணற்கொள்ளை குறித்தும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணற்கொள்ளை காரணமாகவும் முறையான சாலை வசதி இல்லாததாலும் ஆற்று நீரில் இறந்து போனவரின் உடலை சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!