பேரறிவாளன் உட்பட 67 சிறைக்கைதிகளுக்கு தமிழக சிறைத்துறை ஓட்டுநர் உரிமம் வழங்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பேரறிவாளன் உட்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஆனால் பலமாதங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது வரை ஆளுநர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
undefined
இந்த நிலையில் புழல்சிறையில் பேரறிவாளன் உட்பட 67 பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. சிறையில் தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகு அவர்கள் வேலைக்கு உதவக்கூடும் என்பதால் இந்த முயற்சியை அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி சைலேந்திரபாபு முன்னெடுத்தார். அதன்படி பேரறிவாளன் உள்ளிட்ட 67 பேருக்கு சிறை வளாகத்திலேயே வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவடைந்து தற்போது அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது பரோலில் வெளி வந்திருக்கிறார். தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்த அவர் கடந்த மாதம் 12 தேதி ஜோலார்பேட்டையில் இருக்கும் தனது இல்லத்திற்கு வந்து தங்கியுள்ளார். அவரது பரோல் காலம் அண்மையில் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.