குடியாத்தத்தில் காதலன் விபத்தில் உயிரிழந்த நிலையில், துக்கம் தாங்காமல் 11ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி கிராமத்தில் சுப்பிரமணி, தேவா தம்பதியினர் கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 16 வயதில் மகள் இருந்தார். இவர் குடியாத்தம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். சுப்பிரமணியின் தங்கை மகன் சிவா (வயது 19) கடந்த 19ம் தேதி ஆந்திர மாநிலத்தில் விபத்தில் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவாவும், 11ம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சிவா இறந்த சோகத்தில் மாணவி தனது தோழிகளிடம் சிவா இறந்துவிட்டார் நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்க வேண்டும் என மன வருத்தத்தோடு பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்.
தொடர்ந்து நான்கு நாட்களாக சுப்பிரமணி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் நேற்று குடியாத்தம் காவல் நிலையத்தில் சுப்பிரமணி தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார். இந்நிலையில் வீட்டின் அருகாமையில் ராஜசேகர் என்பவர் நிலத்திற்கு தண்ணீர் பாச்சுவதற்காக சென்றபோது, கிணற்றில் பெண் சடலம் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக குடியாத்தம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த காவல் துறையினர், கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு பார்த்தபோது சுப்பிரமணியின் மகள் தான் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து குடியாத்தம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்த அத்தை மகன் விபத்தில் உயிரிழந்த சோகத்தில் தாய்மாமன் மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.